தமிழ்நாடு

’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’ – உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கி நடத்தி வருகின்றனர். அரசியலில் இறுதி நேரத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை கட்சிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தொண்டர்கள் மத்தியில் காத்திருப்பு நிலவுகிறது.

திமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக தனி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று கருத்து தெரிவித்துள்ளதால் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

திமுகவிற்கு முழு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறேன்.

குறிப்பாக சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிடும். தலைவர் சொல்வதற்கு முன்பே நான் சொல்கிறேன், அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்றார்.உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து கூட்டணி கட்சியினரை மட்டுமின்றி திமுகவினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது கூட அவரது மகன் ஸ்டாலின் கூட்டணி தொகுதிகள் குறித்து பெரிதும் கருத்தை முன்வைக்க மாட்டார். தற்போது திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கை ஓங்கி வருகின்றது என பல்வேறு கருத்துகள் இருக்கும் நிலையில், இன்று அவர் தெரிவித்த கருத்து அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Back to top button
error: Content is protected !!