இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட், கோலிவுட் திரைத்துறை பட்டாளங்கள் பலர் இணைந்து நடித்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2 பாகங்களாக தயாரிக்கப்பட்டு தற்போது திரையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் உலகளவில் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நிகழ்த்தி இருந்தது. இதையடுத்து, இந்த திரைப்படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று வெளியானது.
இத்திரைப்படம், கல்கியின் நாவலை விட சற்றே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதற்கிடையில், ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியாகி வெறும் 4 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.