இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘2018’ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்புகளைப் பெற்றதோடு, அதிகளவு வசூல் குவித்த முதல் மலையாள திரைப்படமாகவும் அமைந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஜுட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகர் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, வினீத், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
குறிப்பாக, கேரளா வெள்ளத்தின் போது மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர், அவர்களை காப்பாற்றுவதற்காக களமிறங்கிய மீனவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் அமைந்தது.
இப்படிப்பட்ட வரவேற்புகளை பெற்ற, மலையாள பிளாக் பஸ்டரான ‘2018 – Everyone is a Hero’ திரைப்படம் 96 ஆவது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.