தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..

போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு ஜெயலலிதா நினைவு இல்லம் என மாற்றப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அவருடன் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் வெண்கல சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ பல்வேறு சோதனைகளை வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா. பெண்கள், குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரணாக விளங்கினார். அவரது வழியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தற்போது அதிமுக அரசு அரணாக விளங்குகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களின் உயர்கல்விக்கு அரசு சார்பில் அதிக அளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 32 ஆக இருந்த நிலையில், அவரது வழியில் செயல்படும் அரசின் நடவடிக்கையால் தற்போது 100க்கு 49-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான மாணவர்கள் உயர்கல்வி பயில்வது தமிழகத்தில் தான். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு ஆண்டுதோறும், அரசு விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!