விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!

14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, அதே ஓவரில் பவுண்டரி அடித்த டு பிளிஸ்சிஸ் 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துத் தந்ததால், டு பிளிஸ்சிஸ் மற்றும் அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர்.

இதனால், 16-வது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது. நரைன் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த மொயீன் அலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, டு பிளெஸ்ஸியுடன் கேப்டன் டோனி இணைந்தார். ஆண்ட்ரே ரஸல் வீசிய 19-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் டோனி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் – தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 24 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் லுங்கி இங்கிடி பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. முறையில் அவர் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆண்ட்ரே ரசல், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 22 பந்துகளில் 54 ரன்களை குவித்த அவர், சாம் கர்ரனின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார்.

இதற்கிடையில் பேட் கம்மின்ஸ் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், மற்றும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் சரியான பார்னர்ஷிப் அமையாததால், கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க:  #IPL2021 விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு!

இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: