
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த வருடம் மார்ச் மாதம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கடந்த முறை கொரோனா அச்சத்தால் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பல மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்த விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே அது வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாணவர்களின் சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்தபடியே எளிய முறையில் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வில் வரவுள்ள மாற்றங்கள் குறித்த அறிவிப்பு முதல்வர் அவர்களின் ஒப்புதலை பெற்று வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறி உள்ளார்.