சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16.5 உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டு 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.5 உயர்ந்து ரூ.1,980.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் ரூ.61.50 விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.