
இந்தியா முழுவதும் சமீப காலங்களில் ஆன்லைன் கேம் விளையாடும் சிறுவர்கள் தற்கொலைக்கு முயல்வது பெருகி வந்தது. இதனையடுத்து பப்ஜி, ரம்மி, புளூ வேல் போன்ற ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், புதுச்சேரி வில்லியனூர் அருகே மொபைல் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன்.இவரது மகன் தர்ஷன் (16). தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமினை நேற்று மாலை தொடர்ந்து 4 மணி நேரமாக விளையாடியுள்ளார். அதுவும் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கிக் கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தர்ஷனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் தந்தை பச்சையப்பன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.