தமிழ்நாடுமாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – பார்வையாளராக ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள சிவகுருநாதசுவாமி கோயிலின் முன்பாக இன்று (ஜன.14) காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

களமிறங்கும் காளையர்கள்

இன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும் 788 காளைகளை அடக்க 430 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே தற்போது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு தொடக்கம்

வரலாற்று சிறப்புமிக்க இந்த வீர விளையாட்டை அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் வீரர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்கின்றனர்.

வீரர்களும், காளைகளும் சிறப்புடன் விளையாட ஏதுவாக, சுமார் 150 மீ நீளம், ஒன்றரை அடி உயரத்தில் தென்னை நார்க்கழிவுகள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டுள்ளன. பார்வையாளர்கள், விஜபிக்கள் கண்டுகளிக்கும் வண்ணம் வாடிவாசலின் முன்புறமாக இரண்டு பக்கமும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாதுகாப்புக் கருதி சவுக்குக் கம்புகள், இரும்பு வலைகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசலின் பின்புறம், காளைகள் வரிசையாக வருவதற்கு ஏற்றவாறு சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுக்கப்பட்டுப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திமிறும் காளைகளின் திமில் பற்றும் காளையர்கள்

வாடிவாசலிலிருந்து வெளியேறும் காளைகளை, வீரர்கள் திமிலை இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

வீரர்கள் யாரையும் தன்னருகே வரவிடாமல், மேற்கண்ட எதனையும் செய்ய அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

வெற்றியாளருக்காகக் காத்திருக்கும் பரிசுகள்

நாற்காலி, வேட்டி, துண்டு, குடம், அண்டா, தங்க நாணயம் உள்ளிட்டவை அந்தந்த சுற்றுகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளருக்கு வழங்கப்படும். 8 சுற்றுகளாய் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர் அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவார். இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

மருத்துவ உதவி

வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 16 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என அங்கம் வகிக்கின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை மருத்துவக் கல்லூரி சார்பாக இரண்டு சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் கூடுதலாக அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறை வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காயமடையும் வீரர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 10 எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

காயம்படும் காளைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க கால்நடை மருத்துவர் குழுவும், இரண்டு கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்பட பேரிடர் மீட்புக்குழுவினர் 50 பேர் வாடிவாசல் அருகே இருப்பர்.

ஜல்லிக்கட்டைக் காண விஜபி.,கள் விஜயம்

விஜபிக்கள் வருகையின் காரணமாய் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அவனியாபுரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்ஷன் பாய்ண்ட் என்று சொல்லப்படுகின்ற மாடுகள் வெளியேறும் பகுதியில் அசம்பாவிதம் நேராத வண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. அவனியாபுரத்தின் பல்வேறு பகுதியில் பெரிய திரைகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிற்பகல் 12 மணியளவில் வருகை தரவிருக்கின்றனர்.

ராகுல்காந்தி தனி விமானத்தில் டெல்லியிலிருந்து நேரடியாக மதுரைக்கு 12 மணியளவில் வருகை தருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை 2 மணி நேரம் கண்டு களிக்கிறார். அதன் பின்னர் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அவனியாபுரம் பொதுமக்களும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா எட்டு சுற்றுகளாக நடைபெற்று மாலை 3 அல்லது 4 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!