ஆன்மீகம்

ஐஸ்வர்யத்தை அள்ளி தரும் ஆடி பூரம்!

ஆடி மாதத்தின் முக்கியமான வைபவங்களில் ஆடி பூரமும் ஒன்று. ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாளாகிய ஆடி பூர நன்னாளில், சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். ஸ்ரீனிவாசனின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் ஆழ்வார்களாக அவதரித்த போது, பூமாதேவியும் ஆடிப்பூர தினத்தன்று ஆண்டாளாக அவதரித்து ஆன்மிகத்தில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டினாள்.

ஆடி பூரத்தின் சிறப்பு

பூரம் நட்சத்திரம் என்பது சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாகும்.

சுக்கிரனின் அம்சம் கொண்ட தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவே தான் ஆடி பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மனதில் கணவராக நினைத்து, அவரையே மணந்தாள்.

ஆடி பூரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமண வரம் கைகூடும்.

உலக உயிர்கள் அனைத்தையும் தன்னிலிருந்து உருவாக்கும் அன்னைக்கு, ஆடி பூரம் நாளில் வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

எந்தெந்த தெய்வங்கள்

உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடி பூரம் என்று கூறப்படுகிறது.

பார்வதி தேவி ருதுவான நாள் ஆடி பூரம் என்று புராணங்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஆடி பூரத்தில் அனைத்து அம்பாள்களுக்கும் வளைகாப்பு செய்வது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி வீணை பெற்ற தினமாக ஆடி பூர நன்னாள் கருதப்படுகிறது.

எங்கே சிறப்பு

ஆடி பூரம் தினத்தில் பூமாதேவியே திருவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை காதலித்து மணந்து அவருடன் ஐக்கியமானாள்.

எனவே இந்த தினத்தில், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற கோயில்களில் ஆடி பூர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் அண்ணனான ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரிலும் ஆடி உற்சவம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடி பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில்கள் அனைத்திலும் இந்தநாளில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் கோலாகலமாக நடைபெறும்.

அனைத்து வைஷ்ணவ தலங்களில் மட்டுமல்லாது பெருமாளின் தங்கையான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி குடிகொண்டுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

என்ன பலன்கள்

ஆடி பூரத்தன்று விரதம் இருப்பதால், கணவன், மனைவியிடையே மகிழ்ச்சியான இல்லறம் அமையும்.

தொழில், வியாபார போட்டி, பண விவகாரங்கள் போன்றவற்றால் பிரிந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.

கருத்து வேறுபாடுகளால் பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.

அம்மன் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்று வீட்டில் பூஜையறையில் வைத்து வணங்கினாலோ, பெண்கள் கைகளில் அணிந்துகொண்டாலோ சர்வ மங்கலங்களும் பெருகும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வீட்டில் செல்வ கடாட்சம் நிறைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: