தமிழ்நாடு

‘அமித் ஷா கிட்ட சொல்லி மதக்கலவரம் பண்ணிடுவேன்’: சிக்கன் ரைஸால் சிக்கலில் மாட்டிய பாஜக நிர்வாகி

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர், சையது அபுபக்கர் (36). இவர் திருவல்லிக்கேணி முத்தையா மெயின் தெருவில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல சையது அபுபக்கர் நேற்று (ஜன.12) வியாபாரத்தை முடித்து விட்டு கடையை மூடியுள்ளார்.

அப்போது குடிபோதையில் வந்த மூவர் சிக்கன் ரைஸ் போடச்சொல்லி, சையது அபுபக்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் மூவருக்கும் சிக்கன் ரைஸ் போட்டு கொடுத்த சையது, அவர்களிடம் உணவுக்கானப் பணத்தைக் கேட்டுள்ளார்.

காசு கேட்டால் மதக்கலவரமா?

சையது பணம் கேட்டதும் ஆத்திரமடைந்த அம்மூவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரில் ஒருவர், ‘என்னிடமே நீ காசு கேட்கிறீயா? நான் யார் தெரியுமா? பாஜக தொகுதிச் செயலாளர்’ என்று கடை உரிமையாளரை மிரட்டியுள்ளார்.

அத்தோடு நிற்காமல், ‘அமித்ஷா உதவியாளருக்கு போன் அடிக்கட்டுமா? உடனே 1000 பேர் வருவாங்க… இதனால் மதக்கலவரம் உண்டாகும். கடையே நடத்த முடியாது’- என கடை உரிமையாளர் சையது அபுபக்கரை மிரட்டியுள்ளார். சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணியிலிருந்த ஐஸ் ஹவுஸ் காவலர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடை உரிமையாளர் சையது அபுபக்கர் தன்னை குடிபோதையில் மிரட்டிய திருவல்லிக்கேணி பாஜக மேற்கு தொகுதிச் செயலாளரான பாஸ்கர் உட்பட மூவர் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!