உலகம்

இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவது கடந்த மாதம் தெரியவந்தது. ஏற்கனவே பரவி வரும் வைரசை விட இது 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதும் கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த உலக நாடுகள், இங்கிலாந்துடனான தொடர்புகளை துண்டித்தன. இதில் முக்கியமாக அந்த நாட்டுடனான விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.

இந்த வைரஸ் பரவலால் அதிர்ச்சியடைந்த இந்தியாவும், இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் ரத்து செய்தது. இந்த தடையை 7-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை நீட்டித்த மத்திய அரசு, 8-ந்தேதி (நேற்று) முதல் பாதியளவு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி இங்கிலாந்துக்கான விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இங்கிலாந்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் விமானம் நேற்று காலையில் டெல்லி வந்தது.

இங்கிலாந்துடனான விமான சேவை மீண்டும் அமலுக்கு வந்திருப்பதை தொடர்ந்து, புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகளுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ இருந்தால் மட்டுமே, அதற்கான சான்றிதழ் கொடுத்து பயணம் செய்ய முடியும்.

இங்கு வந்த பிறகும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் கொரோனா இல்லை என கண்டறியப்பட்டாலும், அவர்கள் 14 நாட்கள் கட்டாய வீட்டு தனிமையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

இதைப்போல இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்திறங்கும் பயணிகளுக்கு மாநில அரசும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக டெல்லி வந்ததும் அந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா இல்லாத பயணிகளும் 7 நாட்கள் கட்டாய தனிமைக்கு அனுப்பப்படுவார்கள். பின்னர் வீட்டில் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

டெல்லிவாசிகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய முக்கியமான முடிவுகளை எடுத்திருப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அந்த நாட்டுக்கான விமான சேவையை 31-ந்தேதி வரை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்துடனான விமான சேவை கடந்த 23-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன் இந்தியா வந்த பயணிகள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்திருக்கிறது. நேற்று வரை 80-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசிடம் சிக்கியிருக்கின்றனர்.

இந்த வைரஸ், உகான் வைரசை விட அதிக வேகத்தில் பரவுவதாக கண்டறியப்பட்டாலும், அந்த வைரசை விட தீவிர உயிர்ச்சேதம் ஏற்படுத்துமா? என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!