தமிழ்நாடு

அதிமுக-பாமக பொங்கலுக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு..

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பா.ம.க. அந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதைபேசி சுமூக உடன்பாடு காண்பதற்காக பா.ம.க. குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பேசினார்கள். அந்த பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை பா.ம.க. குழுவினர் டாக்டர் ராமதாசிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்தார்.

அவர்கள் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. அப்போது கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்வு காணவேண்டும். அதன் பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது.

அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்கு பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துள்ளார்கள்.

அமைச்சர்களுடன் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்பட வில்லை. வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

எனவே பொங்கலுக்கு பிறகு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. அதைப்பொறுத்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அமையும். அதன் பிறகே அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!