ஆன்மீகம்

விநாயகருக்கு எதற்காக அருகம்புல் வழிபாடு?

யானை முகக்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமான் முழு முதல் மூர்த்தியாக அனைவரும் வணங்கி வரும் நிலையில், விநாயகருக்கு பல்வேறு பூக்கள், சந்தனாதி தைலங்கள் போன்றவற்றை சமர்ப்பித்து வணங்கினாலும் அருகம்புல் தான் அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும். அதையடுத்து, விநாயகருக்கு எதற்காக அருகம்புல் மாலை சாற்றப்படுகிறது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.

என்ன காரணம்

அனலாசுரன் என்பவன் அருகில் செல்பவர்கள் அனைவரையும் சாம்பலாக்கும் திறன் பெற்றதால் மூர்க்கனாக மாறி பொதுமக்கள், தேவர்கள் என அனைவரையும் கொடுமை செய்து வந்தான்.

அதனால், அவன் அருகில் யாரும் செல்ல இயலவில்லை. அதையடுத்து, தேவர்கள், விநாயகரை வேண்டி தங்களை காப்பாற்றும்படி வேண்டினர்.

அதன்பேரில், பொதுமக்கள், தேவர்களை காக்கும்விதமாக அனலாசுரனைப் பிடித்து விநாயகர் விழுங்கியதால், ஆனைமுகக் கடவுளின் வயிறும் அனலாய் எரிந்தது.

வெப்பம் தாங்காத விநாயகப் பெருமான், தனது அன்னை பராசக்தியை நினைத்து வணங்கினார். தேவர்கள் யாவரும் விநாயகரை குளிர்விக்கும் விதமாக, குடம், குடமாக தண்ணீர் ஊற்றி வெப்பத்தை தணிக்க முயற்சி செய்தனர்.

அது காணாது என்று கங்கை நீரை கொண்டு வந்து ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து விநாயகரின் உச்சியில் வைத்தார்கள். ஆனாலும், அனல் தணியவில்லை.

சப்த ரிஷிகள்

இந்நிலையில், சப்த ரிஷிகள் எனப்படும் அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர் ஆகிய ஏழு முனிவர்களும் சேர்ந்து அருகம்புற்களை கொண்டு வந்து விநாயகரின் தலையில் வைத்தனர்.

இதனால் விநாயகரின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்ததால் மகிழ்ந்தார்.

அதையடுத்து, தனக்கான பூஜைப்பொருளாக அருகம்புல்லை, விநாயகர் ஏற்றுக் கொண்டார்.

அன்று முதல் அனைவரும் விநாயகரை அருகம்புல் கொண்டு வணங்கி வருகின்றனர்.

பயன்கள்

விநாயகப் பெருமான் திருவருளால், வீட்டில் செல்வ வளம் பெருகுவதுடன், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

முக்காலங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபட விநாயகர் அருள்புரிவதால், விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு அவர் அருளை பெற்றிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: