தமிழ்நாடு

ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு – வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் ஆவின் பால் நிறுவனத்தின் பணி நியமனங்களில் சில முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தமிழக அரசின் முக்கியமான அரசுத்துறை நிறுவனமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு தரப்பிலான பால் பொருட்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் பணி நியமனம் செய்வதில் சில குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தேனி, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த சுமார் 870 பேரது பணிநியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் மேலாளர் உட்பட பல பணி நியமனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆவின் நிறுவனத்தின் விதிமுறைப்படி, பணி நியமனத்தில் முதலில் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்ததும், நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதன் பின்பாக 10 நாட்கள் கழித்து பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பின்னாக ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையிலான காலங்களில் இவ்வகையான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

உதாரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில், ஒருவர் எழுத்துத்தேர்வில் 29 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், அவருக்கு நேர்முகத்தேர்வு குழு 31 மதிப்பெண்கள் கொடுத்து யூனியல் துணை மேலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது போன்ற செயலில் பல உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆவின் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: