‘வீட்டை கட்டிப்பார். கல்யாணத்தை செய்து பார்’ என்பார்கள். இவை இரண்டுமே எந்தக் காலத்திலும் கஷ்டமான விஷயங்களாகவே பார்க்கப்படுகிறது.
சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. இப்படிப் பட்டவர்கள் ‘சிறுவாபுரி’ சென்று முருகனை வழிபட அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறும். நிச்சயம் சொந்த வீடு அமையுமாம்.
சிறுவாபுரியை முருகனின் மனஸ்தலம் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இங்கு சென்று உங்கள் குறைகளை சொல்லக் கூட வேண்டாம். அவற்றை நினைத்து உள்ளம் உருக வேண்டினாலே போதும், கிடைக்க வேண்டிய அனைத்தும் முருகன் அருளால் கிடைக்கும். சிறுவாபுரிக்கு செல்பவர்களில் அநேகம் பேர் சொந்த வீடு அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் இங்குள்ள இறைவனை மனதார வந்து வேண்டுகின்றனர்.
எங்கு உள்ளது இந்த சிறுவாபுரி முருகன் கோயில்? சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் ‘சிறுவாபுரி முருகனை’ தரிசிக்கலாம். அதாவது, பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
சிறுவாபுரி கோயிலும் அதன் உள் அமைப்பும்: கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் செல்லுங்கள் நிச்சயம் உங்கள் எண்ணம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அற்புதமாக ஈடேறும்.
Leave a Comment