பால்குடம் எடுப்பது ஏன்? அதன் பலன்கள் என்ன?

 

திருவிழாக்காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேககமாக செய்யப்படுகிறது.

கிராமங்களில் திருவிழாக்களின்போது முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றளவிலும் பால்குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

 

எதற்காக பால்குடம் எடுக்கப்படுகிறது? விரதமிருப்பது எப்படி? என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திருவிழாக்காலங்களில் கோவில்களில் பால்குடம் எடுப்பதற்கு கையில் காப்புக் கட்டி, எட்டு நாள் விரதம் இருக்க வேண்டும். பால்குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, தீர்த்தக்குடம் போன்றவற்றில் கறந்த பாலை ஊற்றி அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

 

பின் அங்கிருந்து ஊர்வலமாக பால்குடத்தை எடுத்து வந்து திருவிழா நடக்கும் கோவிலில் வீற்றிருக்கும் மூலவருக்கு பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

பால்குடம் ஏன் எடுக்கப்படுகிறது?

 

கோவிலில் சிலைகள் அமைக்கப்படும்போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைத்திருப்பார்கள். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் செய்வதால் சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பால் கலக்கிறது.

பின் அந்த அபிஷேக பால் கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகால் வழியாக வெளியே வரும். வடிகால் தொட்டியில் அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்தர்கள் எடுத்து பருகுவர். இந்த அபிஷேக பாலை பருகுவதால் பல மருத்துவப் பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிஷேகம் செய்வதன் நோக்கம். இது போன்ற காரணங்களால் தான் பால்குடம் எடுக்கப்படுகிறது.

பலன்கள்

வேண்டுதல்கள், நேர்த்திக்கடன், குடும்ப வளமை போன்ற காரணங்களால் பால்குடம் எடுக்கின்றார்கள்.

அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக்கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக்கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

 
Exit mobile version