பொதுவாகவே, பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது ஏன் விசேஷம்? வாங்க இது குறித்துப் பார்ப்போம்.
பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையாகும். பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் ‘சரஸ்வதி யாமம்’ எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது என்பதாக சாஸ்திரம் வரையறுக்கிறது. அதற்கு பதில், தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்வது விசேஷம். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.
பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ விளங்குகிறது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியையும் கூட விருத்தி செய்யுமாம்.
“சூரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்!” என்கிறது சாஸ்திரம். இதன் பொருள் யாதெனில், ‘சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல் செல்வச் செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாளாம்’. அதனால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் குறிப்பாகப் பெண்கள் குளித்து, சுத்தமாகி ‘விளக்கு ஏற்றி’ உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை வணங்குங்கள். தவிர, இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவது லட்சுமி கடாக்ஷத்தை தரும்.
எனினும், வீட்டில் விளக்கு ஏற்றும் சமயத்தில் யாரும் தூங்கக் கூடாது என்பது ஐதீகம். ஆனால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றும் சமயத்தில் சில விதி விலக்கு உண்டு. இதன் அடிப்படையில் மிகவும் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் போன்றோர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தூங்குவது தவறில்லை. ஆனால், பழுத்த சுமங்கலிகள் அல்லது இல்லத்தரசிகள் அவர்கள் நோயாளிகளாக இல்லாத பட்சத்தில் தூங்குதல் பாவம்.
