கார்த்திகைக்கு அப்படி என்ன சிறப்பு?

 

கார்த்திகை ‘கார்த்திகேயனாம்’ கந்தனுக்கு உகந்த நாள். சரவணப் பொய்கையில் தோன்றிய அப்பனின் பிள்ளையான அந்தச் ‘சுப்பனுக்கு’ இன்று விசேஷம்.

அந்த வகையில் கார்த்திகைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்தத் தெரிந்த செய்தி, ஆனால் தெரியாத கதையை இப்போது பார்ப்போம்.

 

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே, நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

இன்றைய தினத்தில், கால சூழ்நிலையால் கோயிலுக்குப் போக முடியாதவர்கள். குறிப்பாக, வீட்டில் இருப்பவர்கள், கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா போன்ற மலர்களில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

 

முருகப் பெருமானை அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம்.

“ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்”

 

மேற்கண்ட இந்த மந்திரத்தை சொல்ல கடன் தீரும். காரணம், முருகன் ஆறு முகன். ஜோதிடத்தில் லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் 6 ஆம் இடம் கடன், நோய், பகை, வழக்கு என இவை அனைத்திற்கும் காரணம் ஆகிறது. இந்நிலையில், இந்த நாளில் முருகனை வழிபட மேற்கண்ட தீயவை அனைத்தும் அகலும்.

இறைவன் ஒரு கையால் கொடுத்தாலே வாங்க இரு கைகள் போதாது. காரணம் இறைவனின் கைகள் விசாலமானது. அப்படி இருக்க பன்னிரு கைகள் கொண்டு கொடுத்தால், அப்பப்பா!

 
Exit mobile version