தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும்.
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தைப்பூசத்தின் சிறப்புகள்:
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள். ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச விரத முறை:
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .
மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் .
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.
சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.