இந்து மதத்தில் பெரும்பாலான மந்திரங்கள் ‘ஓம்’ என்னும் பிரணவத்தில் தான் ஆரம்பிக்கிறது. இதற்கு ஆதாரமாக, உலகின் மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.
அதாவது, “ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம்!” என்று முடிப்பர்.
ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில் துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்
‘உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா’ – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.
பாரதியின் பாஞ்சாலி சபதம் முதல் பாடலிலேயே. இப்படியாக அந்த தீரப் புலவன் செருக்காய் எழுதுகிறான்…
“ஓமெனப் பெரியோர்கள் – என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய், தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் நாமமும் உருவும் அற்றே – மனம், நாடரிதாய் புந்தி தேடரிதாய், ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் நின்றிடும் பிரமம் என்பார் – அந்த நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்”.
பாஞ்சாலி சபதத்தின் இறுதிப் பாடலும் கூட ஓம்கார கர்ஜனையில் தான் முடிகிறது. அதுவும் பின்வருமாறு.. “ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்று வானம் பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று சாமி தருமன் புவிக்கே – என்று சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்! நாமுங் கதையை முடித்தோம் – இந்த நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.” என்று பாரதி ‘ஓம்’ இல் துவங்கி ‘ஓம்’ இல் முடித்திருப்பார்.
தொடர்ந்து ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மிக நீண்ட அலைவரிசையில் இந்த “ஓம்” என்பதை மட்டுமே பலமுறை உச்சரித்துக் கொண்டே இருங்கள். சில கணங்களில் ஐம்புலன்களும் உங்களுக்குள் அடங்குவதை நீங்களே காண்பீர்கள். உங்களுக்கே நீங்கள் அறிமுகம் ஆவீர்கள். உங்களை நீங்களே உணர்வீர்கள். சொர்க்கம் – நரகம் இரண்டையும் தாண்டி இன்னொரு உலகை உங்களுக்குள் உணர்வீர்கள். இருண்ட மனம் தெளிவடைந்து புதிய உதயத்தை க்ஷண நேரம் தரிசிப்பீர்கள். பிரபஞ்சப் புதிர்கள் அனைத்தும் புரிதல் அடையும். அங்கு உங்களுக்குள் ஒரு ரசவாதம் நடக்கும். அதன் தாக்கத்தால் உங்களுக்குள்ளே ஒரு உலகம் உருளக் காணுவீர்கள். அதன் வெளிப்பாடாய் நானே பிரம்மம் (அஹம் பிரம்மாஸ்மி!) என்பதை ஒரு நிலையில் உணர்வீர்கள். அதை உணர்ந்த மாத்திரத்தில், அந்த மையப்புள்ளியில் மரணம் கூட உங்களிடம் ஒரு கணம் மண்டி இடும். சாவு கூட உங்களிடம் செத்துப் போகும்.
மொத்தத்தில், “ஓம்” – அது ஓம்காரத்தின் ஒலி. சங்கில் இருந்து வெளிவரும் சத்தம். சூரியனில் இருந்து வெளிப்படும் சத்தம். பிரபஞ்ச சத்தம் என எல்லாமே “ஓம்” என்ற ஓம்காரத்தின் சத்தமாகவே வெளிப்படுகின்றன.