பொதுவாகவே செவ்வாயும், சனியும் பகை கிரகங்கள்… அவர்கள் ஜாதகத்தில் இணைந்து இருப்பது என்பது பெரும்பாலும் நல்ல பலன்களை தராது. சனியும் + செவ்வாயும் இரு வேறு எதிர்வினை சக்திகளை கொண்ட கிரகம். ஒருவர் ஜாதகத்தில் இருவரும் சேர்ந்து காணப்பட்டால் அவருக்கு நிச்சயம் ஒரு அறுவை சிகிச்சை நடந்தே தீரும். அதிலும், இந்த ஒரு பாவ கிரகங்களும் இணைந்து 7 ஆம் பார்வையாக ஒரு இடத்தைப் பார்த்தால் அதனால் பெரிய அளவில் தீமைகள் ஏற்பட இடம் உண்டு. அப்படியாக செவ்வாயும், சனியும் இணைந்து பார்க்கும் அந்த இடம்…
லக்கினமாக இருந்தால், முன்கோபம், படபடப்பு, பொறுமை இன்மை போன்றவை ஏற்படலாம். ஜாதகர் பலரால் எதிர்மறையாகக் கூட விமர்சிக்கப்படலாம்.
செவ்வாயும், சனியும் சேர்ந்து லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தைப் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து கொள்ள வேண்டும். அதேபோல, 2 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டு இருப்பின் அந்நபர்கள் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், வராக் கடன் அதிகரிக்கும். அதேபோல, அடிக்கடி தன நஷ்டம் கூட ஏற்படலாம். குறிப்பாக பிறருக்கு வாக்கு கொடுத்தால் அதனை காப்பாற்ற இயலாமல் போகலாம். குடும்பத்தில் கூட சலனங்கள் ஏற்படலாம்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை லக்கினத்திற்கு 3 ஆம் இடத்தில் விழுந்தால், கண் மூடித் தனமான தைரியம் ஏற்படலாம். ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதைப் போல மற்றவர்கள் செய்யத் தயங்கும் ஆபத்தான செயல்களை கூட இவர்கள் செய்யத் தயங்க மாட்டார்கள்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை நான்காம் இடத்தில் காணப்பட்டால் வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் தேவை அற்ற செலவுகள் அதிகரிக்கலாம். நிலங்களை வாங்கும் சமயத்தில் கூட வில்லங்கம் வராமல் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். சிலருக்குத் தாயாரின் உடல் நிலை கூட பாதிக்கப்படலாம் அல்லது ஏற்ற – இறக்கமாக காணப்படலாம்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஐந்தாம் இடத்தில் காணப்பட்டால் கல்வியில் தடைகள் ஏற்படலாம். வெளிநாடு யோகம் கூட சிலருக்குத் தடை படலாம். அப்படியே வெளிநாடு சென்றால் கூட பெரிய அளவில் பொருள் ஈட்ட முடியாத நிலை கூட ஏற்படலாம். என்ன தான் செய்தாலும், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது சற்று கடினமாகத் தான் இருக்கும். பலரால் ஜாதகர் விமர்சிக்கப்படுவார்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஆறாம் இடத்தில் காணப்பட்டால், எதிரிகளை தந்திர உபாயம் கொண்டாவது இவர்கள் வென்று விடுவார்கள். முட்டி, மோதி எந்த ஒரு விலையையும் கொடுத்தாவது தலைமை பதவிக்கு வந்து விடுவார்கள். மனதில் தர்ம சிந்தனை குறையலாம்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஏழாம் இடத்தில் காணப்பட்டால், திருமண வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். கூட்டாளிகள் கூட நல்ல விதத்தில் அமையாமல் போகலாம் அல்லது சரியான சமயத்தில் காலை வாரலாம். இந்நிலையில், முடிந்த வரையில் இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை எட்டாம் இடத்தில் காணப்பட்டால், வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக கவனத்துடன் சென்று வருதல் நலம். சிலருக்கு, சிறு – சிறு விபத்துக்கள் கூட ஏற்படலாம். நெருப்பு, ஆயுதங்கள் போன்ற இவற்றை கையாளும் சமயத்தில் கூட கூடுதல் கவனம் தேவை. உடலில் நிறைய தழும்புகள் கூட சிலருக்கு காணப்படலாம்.
சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒன்பதாம் இடத்தில் காணப்பட்டால், தந்தையுடன் சின்னச் – சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விலகலாம். பூர்வீக சொத்து விஷயங்களில் வில்லங்கம் கூட ஏற்படலாம். தந்தை வழி உறவுகளுடன் கூட பகை – கருத்து வேறுபாடுகள் தரலாம். அலைச்சல் அதிகம் காணப்படலாம். பூர்வீக சொத்துக்களில் கூட சிறு இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.
செவ்வாயும், சனியும் சேர்ந்து பத்தாம் இடத்தைப் பார்த்தால், தொழில் அல்லது வியாபார ரீதியாக நிறைய போட்டி – பொறாமைகளை சந்தித்தே முன்னுக்கு வர வேண்டி இருக்கும். அடிக்கடி, உத்யோக மாற்றம் கூட சிலருக்கு ஏற்படலாம். அப்படியே என்ன வேலை செய்தாலும் மேலதிகாரியின் தயவு கிடைப்பது கூட சிலருக்கு அரிதாகக் காணப்படலாம். அதிக உடல் உழைப்பு தரும் வேலையாக சிலருக்கு அமையலாம். இதனால் நேரத்திற்கு உண்டு – உறங்க முடியாத நிலை கூட சிலருக்கு ஏற்படலாம்.
செவ்வாயும், சனியும் சேர்ந்து 11 ஆம் இடத்தைப் பார்த்தால், யூக வணிகம், மியூச்சுவல் ஃ பண்டு, பங்கு சந்தைகள் என இவற்றின் பக்கம் கூட தலைவைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது. காரணம், மேற்கண்டவற்றால் பெருமளவில் இழப்புக்கள் ஏற்படலாம். குறிப்பாக, மூத்த சகோதர உறவுகளுடன் மனக்கசப்பு கூட ஏற்படலாம்.
செவ்வாயும், சனியும் சேர்ந்து 12 ஆம் இடத்தைப் பார்த்தால் சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தேவை இல்லாத தண்டச் செலவுகள் சிலருக்கு அதிகரிக்கலாம். சிலருக்குத் தூக்கம் கூட தடைபடலாம்.
மொத்தத்தில் சனியும், செவ்வாயும் ஒருவர் ஜாதகத்தில் இணைவதும் – பார்ப்பதும் அவ்வளவு நல்ல பலன்களைத் தராது.
