“மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்”
மேற்படி, இந்தத் திருமணத்தின் போது சொல்லும் மந்திரத்தை புரோகிதர் சொல்லி தாலி எடுத்துக் கொடுப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால், இதனை புரோகிதரை விட மணமகன் தனது வாயால் திரும்பிச் சொல்வது தான் சிறப்பு. காரணம், மேற்படி மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா?
மங்களகரமான பெண்ணே, எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறுவதற்காக (அதாவது தர்மநெறியுடன் கூடிய வாழ்க்கையை நடத்துவதற்காக) திருமாங்கல்யத்துடன் கூடிய இந்த கயிற்றினை உன் கழுத்தினில் கட்டுகிறேன்.
நீயும் நானும் இணைந்து சரத் ருது என்று சொல்லப்படக் கூடிய கார்காலத்தினை நூறு முறை (சரத: சதம்) சந்திக்க வேண்டும். (அதாவது நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்) என்ற உயரிய கருத்தினை ‘மாங்கல்யம் தந்துநானேந’ என்று துவங்குகின்ற மந்திரம் தெளிவாக உணர்த்துகிறது.
இது மந்திரம் என்பதை விட மணமகன் – மணமகளுக்கு சொல்லும் உறுதிமொழி என்ற விதத்தில் கூட எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில், திருமண வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வரும் – போகும் அவற்றை எல்லாம் சமாளித்து தம்பதிகள் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இம்மந்திரம் சொல்லப்படுகிறது.