உலகில் எந்த ஒரு தூப தீபத்திற்கும் இல்லாத பெருமை பச்சை கற்பூரத்திற்கு உண்டு. கற்பூரம் ஒன்று தான் திடப் பொருளாக இருந்து திரவப் பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது. வேறு எந்த திடப் பொருளுக்கும் இந்தத் தன்மை கிடையாது.
அந்த வகையில், வீட்டில் உள்ள தெய்வ சிலா ரூபங்களுக்குப் பச்சை கற்பூர அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். பச்சை கற்பூரம் வாசனையை அதிகமாகத் தருவதினால் இதைக் கொண்டு வீட்டில் பூஜை செய்வதன் மூலம், வீடு முழுவதும் வாசனை பறவி துர்சக்திகள் அனைத்தையும் போக்கி நேர்மரை சிந்தனையை அதிகரிக்கும்.
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து. பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்குப் பெரிய சக்தி இருக்கிறது.
பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும் என்கிறது ஆன்மீகம். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போகக் காரணமே வீட்டில் இருக்கக் கூடிய துர் சக்திகள் தான்.
பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்கக் கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும் என்பதாக ஆன்மீகம் பறைசாற்றுகிறது. அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்குமாம். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சைக் கற்பூரத்தை இடம் பெறச் செய்வது நல்லது.
பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்துப் பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். இப்படிச் செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.
வீட்டில் அதிகம் சண்டை வந்து கொண்டே இருக்கிறதா?!… கவலைப்படாதீர்கள் பச்சை கற்பூரத்தை பன்னீரில் முழுவதும் மூழ்கும் படியாகப் போட்டு பூஜை அறையில் வையுங்கள். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் குறையும். இப்படியாகப் பச்சை கற்பூரத்திற்கு ஏராளமான ஆன்மீக ஆற்றல்கள் உண்டு. இதனைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
