கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று திங்கள்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கூடுதல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதிகாரிகளுடன் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
மறுபுறம், தரிசன நேரத்தை ஒரு மணிநேரம் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோயில் அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை இன்று சபரிமலையில் தரிசனத்திற்காக 1,07,260 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சீசனில் இதுதான் அதிகபட்சம்.. ஆனால் லட்சத்தை கடந்தது இது இரண்டாவது முறை. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரால் திணறியதாக தெரிகிறது.
இருப்பினும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பாக பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் குழுக்களாக அனுமதிக்கப்படுகின்றனர் என்றார். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, காட்டுப்பாதை வழியாக பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
