ஒரு முறையேனும் சென்று பார்த்திட வேண்டிய சுற்றுலா தளம்!

 

வைகை ஆறு பாயும் மாவட்டமான மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை பெரும்பாலும் ‘மீனாட்சி அம்மன் திருக்கோயில்’ என்றே அழைப்பதுண்டு. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கட்டட கலைகளுக்கு இந்த திருத்தலமும் ஓர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். இதில் மூலவராக சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்பிகை காட்சியளிக்கின்றனர்.

கோயில் வரலாற்றுக் கதைகள்:

 

முற்காலத்தில் கடம்பவனம் என்ற காடாக இருந்த இக்கோயில் பாண்டிய மன்னன் குலசேகரன் கனவில் அம்பிகை தோன்றி காட்டை அழித்து கோவில் கட்டச் சொல்லியதாகவும் விருத்திகாசூரன் என்ற அசுரனைக் கொன்றதால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மத்தி தோஷத்தை போக்க லிங்கத்தை உண்டதாகவும் அதனால் ஏற்பட்ட நகரம் என்றும் கூறுவது உண்டு.

பிரம்மாண்ட கோபுரங்கள்:

 

சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பிரமாண்டமான திருக்கோயில் ஆகும். கிழக்கு மேற்காக 847 அடிகளையும் தெற்கு வடக்காக 792 அடிகளையும் கொண்டது. இக்கோவிலில் 8 கோபுரங்களும் 2 விமானங்களும் உள்ளன. கருவறை விமானங்களை இந்திர விமானங்கள் என கூறப்படுகின்றன.

8 கோபுரங்களில் 4 கோபுரங்கள் மிகவும் உயர்ந்த கோபுரங்கள் ஆகும். இதில் 32 கற்சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இடம்பெறுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு கால இடைவெளியில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்தாமரைக் குளம் அமைக்கப்பெற்றுள்ளது.

 

வியக்கத்தக்க மண்டபங்களும் தூண்களும்:

11 மண்டபங்கள் இக்கோயிலின் கட்டிடக்கலை அழகை மேலும் சிறப்பிக்கின்றன. இதில் மிகச் சிறப்பு மிக்கது ஆயிரங்கால் மண்டபம் ஆகும். ஒவ்வொரு தூண்களும் 73 க்கு 76 சதுர மீட்டர் அளவில் உள்ளது. மேலும் இதில் 22 இன்னிசை எழுப்பக் கூடிய தூண்கள் இடம் பெற்றுள்ளன.

15 தூண்கள் இருக்கும் இடத்தில் சபா சன்னதி அமைந்துள்ளது. மிக வியக்கத்தக்க ஒன்று இந்த மண்டபங்களை எந்த கோணங்களில் இருந்து பார்த்தாலும் ஒரே நேர்வரிசையில் தோன்றும் காட்சியமைப்பைக் கொண்டது.

மேலும் ஆயிரங்கால் மண்டபம் கோயில் அருங்காட்சியமாக இருக்கின்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் இரண்டு தூண்களும் மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ஆடி வீதியில் இசைத் தூண்கள் ஐந்து என மொத்தம் ஏழு தூண்கள் இடம் பெற்றுள்ளன.

இக்கோயிலில் திருவிழாவாக சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியன்று கொண்டாப்படும் ‘சித்ரா பௌர்ணமி திருவிழா’ பிரசித்தி பெற்றது ஆகும்.

மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபோகம் உலக அளவில் மிகவும் பார்க்கத் தக்க விழாவாக கொண்டாப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் தமிழின் 12 மாதங்களுக்கும் சிறப்பு பூசைகள் மற்றும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியாகவும் கடம்ப மரத்தடியில் சிவன் ‘சுயம்பு’ லிங்கமாக காட்சியளிக்கின்றார்.
இங்குள்ள மீனாட்சியம்மன் சிலை மரகத கல்லால் உருவாக்கப்பட்டது ஆகும். எப்போதும் அம்பிகை மீனாட்சிக்கு தான் முதல் மரியாதை நிகழ்வது வழக்கமாகும்.

ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சபை இத்திருக்கோயில் ஆகும். சிவ பெருமான் நடனமாடியதாக சொல்லப்படும் ஐந்து தளங்களில் இதுவும் ஒன்று.

பிற கோயில்களில் நடராசர் சிலை இடது காலை தூக்கி நடனமாடும் காட்சியமைப்பு இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் வலது காலை தூக்கி நடனமாடும் காட்சியமைப்பு இருக்கிறது.

சிவனின் 64 திருவிளையாடற்ப புராணங்களும் மதுரையில் நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

தமிழை சிறப்பிக்கும் பொருட்டு இக்கோயிலை சுற்றியுள்ள தெருக்கள் அனைத்திலும் தமிழ் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தேவாரக் காலத்தில் இத்திருக்கோயில் ‘திருவாலவாய்’ என்று அழைக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றிவர மின்கலத்தில் இயங்கும் வாகனங்கள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கோயிலின் வெளிப்புறத்தை முழுமையாக சுற்றிப் பார்க்க முடிகிறது.

 
Exit mobile version