உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க முயன்ற இளம் கால்பந்து வீரர் தவறி விழுந்து மரணம்!!

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் இறுக்கமான சூழலில் அந்நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற இளம் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி அமெரிக்க இராணுவ விமானத்திலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகால போரில் நிம்மதியை இழந்து பல குடும்ப உறவுகளை இழந்து தவித்து நிற்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. ஏதோவொரு நம்பிக்கையில் காத்து கிடந்த அந்த மக்களுக்கு அமைதி என்பது இனி கிடைக்கக்கூடாத ஒன்றாக மாறிவிட்டது. தாலீபான்களின் கைப்பிடியில் சிக்கி வாழும் வாழ்க்கை வேண்டாம் என உயிருக்கு பயந்து பலர் அந்நாட்டை விட்டு வெளியற முயன்று வருகின்றனர்.

அதற்காக நின்று கொண்டிருக்கும் விமானத்தில் ஏறுவதற்கு முயற்சிக்கும் மக்கள், பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து மரணித்தவர்கள் என வெளியான வீடியோ காட்சிகள் பார்ப்பவரது இதயத்தை பதைக்க வைத்தது. இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி தனது இன்னுயிரை மாய்த்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது கடந்த திங்கள் கிழமையன்று காபூலில் இருந்து புறப்பட்ட சி -17 என்ற அமெரிக்க இராணுவ விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர் கீழே விழுந்து மரணத்தை தழுவியுள்ளார்.

மறைந்த அந்த வீரருக்கு அவரது தோழர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அஞ்சலி செலுத்துவதாக ஒரு வீடியோ ஒன்று ஊடக தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த மரணத்தை ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக பிரான்ஸ் 24 ஆல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடும் தீவிர முயற்சியில் உயிரிழந்தவர்களில் அன்வாரியும் ஒருவர். கடந்த திங்கள் கிழமையன்று காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சி -17 விமானத்தில் அன்வாரி ஏறினார்.

காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானத்தின் தரையிறங்கும் கருவியின் அருகில் இறந்த வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அன்வாரியின் மரணம் குறித்த சோகமான செய்தி வந்துள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் பயணித்த இந்த இளம் வீரரது வாழ்க்கை பயணம் பாதி வழியில் எதிர்பாராத விதமாக முடிந்துள்ளது தற்போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் புதிய உச்சத்தை நெருங்கும் கொரோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: