தமிழ்நாடுமாவட்டம்

ரெயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளிடம் ரூ. 2 லட்சம் அபராதம் வசூல்..!

சென்னை ரெயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக முககவசம் அணியாதவர்களை கண்காணித்தனர். அந்த வகையில் முககவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்தார்.

சென்டிரல் ரெயில் நிலையம்

இதே போல் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு முக கவசம் அணியாமல் இருந்த வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு முககவசம் அணியாமல் வரும் பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட பாதுகாப்பு படை முதுநிலை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடந்த இந்த பணியில், பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை சோதனை செய்த பின்னரே ரெயில்நிலையத்துக்கு ள் அனுமதிக்கப்பட்டனர். அதோடு முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தர் தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வந்ததாக 52 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:  மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் கஷாயம்! இந்த நோய் எல்லாம் பறந்துவிடும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: