கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வட்டார தகவல்களின் படி, ஆரம்ப கட்டத்தில் 11 மில்லியன் கோவிஷீல்ட் டோஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, கோவிஷீல்ட, பாரத் பயோடெக்கின் “கோவாக்சின்” உள்ளிட்ட மூன்று தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஜனவரி 16 முதல் இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதர் பூனவல்லா, இந்த தடுப்பூசி இந்தியாவின் தனியார் நிறுவனங்களின் ஒரு டோஸுக்கு சுமார் 1,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படும் என்றும், ஒரு டோஸ் தயாரிக்க சுமார் ரூ.250 செலவாகும் என்றும் கூறி இருந்தார். இன்று பிரதமர் மோடி அவர்கள் மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பூசி குறித்து காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி முதலில் செலுத்தப்படும் எனவும், பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும் என தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் அடுத்த சில மாதங்களுக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.