மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்.. 3 ஆண்டு தண்டனை விதித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்..!

மத்திய அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ், விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.