தமிழ்நாடு

ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு இரவோடு இரவாக 9,613 பேருக்கு பணி ஆணை..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணிகளை நிரப்புவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியானது. மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தரம் செய்யாமல், புதிதாக கேங்மேன் பணியிடத்தை உருவாக்கி தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது என்று கருதி இந்த அறிவிப்பாணையை எதிர்த்து, தடை வழங்க கோரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மின்சார வாரியமும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரியம் தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் கூறும்போது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தற்போது 9 ஆயிரத்து 613 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிரிவு பொறியாளர்களின் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும் சிறப்பாக பணி செய்ய முடியும். இந்த நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், மின்சார வாரிய துறை அமைச்சர், வாரிய தலைவர் உள்ளிட்டோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இதுகுறித்து மின்சார வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் எம்.சுப்பிரமணியன் கூறும்போது, மின்சார வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக தகுதி உள்ள அனைவருடைய இ-மெயில் முகவரிக்கு பணி ஆணையும், வட்ட ஒதுக்கீடும் இணைந்த உத்தரவையும் அனுப்பி உள்ளது. இப்பதவிகளை நிரப்ப பல தடைகளை முறியடித்து கடும் முயற்சிகளை எடுத்த முதல்-அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், மின்வாரியத் தலைவர், உயர் அதிகாரிகள், பொறியாளர்களுக்கு ஐக்கிய சங்கம் நன்றி தெரிவித்து உள்ளது. புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் கேட்கும் பகுதியில் காலிப்பணியிடங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தரப்படும். இவர்களின் வருகையால் பணிச்சுமை குறைவதோடு பொதுமக்களுக்கும் சிறந்த சேவையும் அளிக்க முடியும்” என்றார்.

மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, “கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் தகுதி உடைய 9 ஆயிரத்து 613 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி இடங்களில் சென்று பணியில் சேர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றனர்.

Back to top button
error: Content is protected !!