தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அரசு பணிகள், பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று உள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆவின் பால் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் இலவச பயணம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு போன்ற திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மாற்றுத் திறனாளிகள் நலனிலும் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்கள் உதவியாளர் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தார்.

இது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளில் முதல்வர் அவர்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். முதல்வரின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு துறை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதில் அரசு வேலைவாய்ப்பு, பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தனியார் நிறுவனங்களில் சமவாய்ப்பு உள்ளிட்டவை மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக கிடைப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை தாமதமில்லாமல் சென்றடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் அரசுப்பணிகளில் 4 சதவீதம், கல்லூரி, பல்கலைக்கழக உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும அரசு சார்பில் உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: