மாவட்டம்

இளம்பெண்ணை கொலை செய்த 2 பேர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் இளம்பெண் பிணம் கிடந்தது. இது குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்து கிடந்தவர் திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (23) என தெரிய வந்தது.

இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது உடலை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஜெயஸ்ரீ கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

போலீசார் ஜெயஸ்ரீயின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் பழனி அருகே உள்ள கோம்பைபட்டியைச் சேர்ந்த தங்கதுரை என்பவருடன் நீண்ட நாட்கள் பேசி வந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து தங்கதுரையின் செல்போன் எண்ணை வைத்து அவரிடம் விசாரணை செய்தனர்.

இதில் அவர் ஜெயஸ்ரீயை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தென்னம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் மகள் ஜெயஸ்ரீயும், கோம்பைபட்டியைச் சேர்ந்த தங்கதுரை (25) என்பவரும் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தங்கதுரை ஜெயஸ்ரீயுடன் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்டபோது இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார். இருந்த போதும் தொடர்ந்து ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கடந்த 1-ந் தேதி ஒட்டன்சத்திரம் வருமாறு ஜெயஸ்ரீயை தங்கதுரை அழைத்துள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து வாகரைக்கு அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே தனது நண்பர் ஜெகநாதனுடன் சேர்ந்து ஜெயஸ்ரீயை கொலை செய்ய தங்கதுரை திட்டமிட்டுயிருந்தார். அதன்படி ஜெயஸ்ரீ அங்கு வந்ததும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது உடலை புதருக்குள் மறைத்து விட்டு சென்று விட்டனர். ஆனால் 2 நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டது உறுதியானது.

ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மில் வேனையும் தனியார் பஸ்சையும் கல் வீசி தாக்கினர். இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கல் வீச்சில் ஈடுபட்ட ஜெயஸ்ரீயின் உறவினர்களான நவீன் வளவன் (19), சுரேஷ்குமார் (24), சரவணன் (31), முத்துப்பாண்டி (27), சரவணன் (25), முத்துவேல் (50) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

Back to top button
error: Content is protected !!