ஆன்மீகம்

மாசி மகத்தின் சிறப்பு!

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

மாசி மகத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் ஒரு புராண கதை:

மிகவும் கொடூரமான அரசன் ஒருவன் இருந்தான். தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவன் தொந்தரவாக இருந்தான். அவனை எவ்வாறு வீழ்த்துவது என்பது எவருக்கும் புரியவில்லை. அவனை வெல்வதற்கான உபாயத்தை கூறுவதற்காக, அந்த அரசனின் குரு, காரிருள் சூழ்ந்த நேரத்தில் வருணனை தேடிச் சென்றார்.

ஆனால் குருவை பகைவன் என்று தவறுதலாக நினைத்த வருணன், அவர் மீது ஆயுதத்தை வீசினார். இதில் குரு இறந்து விட்டார். அப்போது அங்கு ஒரு கொடிய பேய் உருவம் தோன்றியது. அது வருணனை கால்களை, கைகளோடு சேர்த்து, கழுத்தோடு கூடும்படி கட்டி சமுத்திரத்திற்குள் போட்டு விட்டது. வருணன் அங்கு பலகாலமாக துன்பங்களை அனுபவிக்கும்படி ஆயிற்று. அத்துன்பத்தை நீக்குவோர்தான் எவரும் இல்லாமல் போயிற்று.

வருணன் இல்லாததால் மக்களும், தேவர்களும் மிகவும் துன்பப்படும் நிலை உருவானது. இதையடுத்து மக்களும், தேவர்களும் சிவபெருமானை நோக்கி வேண்டினர். வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளி, வருணனுடைய கட்டுகளை அறுத்தெறிந்தார். வருணன், சமுத்திரத்திற்கு மேல் எழுந்து வந்து சிவபெருமானை வணங்கினார். அன்றைய தினம் மாசி மகம் ஆகும்.

தன்னை துன்பத்தில் இருந்து விடுவித்த சிவபெருமானிடம், ‘மாசி மகமாகிய இந்த தினத்திலே, இந்தத் துறையிலே நீராடுவோரின் பாவத்தை போக்கி, அவர்களுக்கு முக்தி கொடுக்க வேண்டும். மேலும் தேவர்கள் இந்தத் துறையில் அந்த நேரத்தில் எழுந்தருளல் வேண்டும்’ என்று வருணன் வேண்டி பிரார்த்தித்தான்.

ஒரு முறை மேற்கண்ட சரித்திர கதையை வியாக்கிரபாத முனிவர், இரணியவர்மச் சக்கரவர்த்திக்கு கூறினார். அவன் மாசி மகத் தினத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கொடியேற்றுவித்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் முதலானோர் வந்து விழாவைத் தரிசித்து, சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். இதையடுத்து சிவபெருமான், சமுத்திரத்துக்கு எழுந்தருளினார். அப்போது வருணன், சிவபெருமானை எதிர்கொண்டு வழிபட்டார்.

சிவபெருமான் வருணனது துன்பத்தை நீக்கியருளிய துறையிலேயே திருமஞ்சனமாடி அடியார்களுக்கு அருள்புரிந்தார். பின்னர் கனகசபையினுள் புகுந்தார். சிதம் பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் பாசமறுத்த துறையும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தினத்தில் அங்கு தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.

மாசி மக தினம் என்பதே சிறப்பான ஒன்றுதான். இந்த தினத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். இந்த தினத்தில் கும்பகோணத்தில் சிறப்பான திருவிழா ஒன்று நடைபெறும். கும்பகோணத்தின் நடுவில் உள்ள தீர்த்தக் குளத்தின் பெயர் மகாமக குளம் ஆகும்.

இப்பூவுலகில் வாழும் மக்கள் தாங்கள் புரிந்த பாவங்கள் அனைத்தையும், புண்ணிய நதிகளில் மூழ்கி கழுவிக்கொள்கின்றனர். ஆனால் அந்த பாவங்களை பொறுக்க முடியாத புண்ணிய நதிகள் பெரும் சிரமத்தை அடைந்தன. அந்நதிகள் சிவ பெருமானை வேண்டியதன் பேரில், அவர் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடி, பாவத்தை போக்கிக்கொள்ளும்படி அருள் புரிந்தார்.

அதன்படி கோதாவரி, காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி, சரயு, புஷ்கரணி, நர்மதா, குமரி ஆகிய 9 நதிகளும் இந்த மகாமக குளத்தில் வந்து தங்கி தங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதாக ஐதீகம் கூறப்படுகிறது. புண்ணிய நதிகள் பாவம் போக்கும் இந்த நதியில் ஞானிகளும், மக்களும் கூட நீராடுகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: