கறிவேப்பிலை பயன்படுத்தாத சமையலே இல்லை என்று சொல்லலாம். சட்டினி வகைகள், குழம்பு வகைகள், சைவ, அசைவ உணவுகள் என அனைத்திலும் கறிவேப்பிலை கட்டாயம் இடம் பிடித்து விடும். உணவுக்கு ருசியும் மணமும் தருவதோடு உடலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு உணவுப் பொருள் தான் கறிவேப்பிலை.
கறிவேப்பிலையில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் விட்டமின் ஏ, பி, சி, இ என அனைத்து விட்டமின்களையும் உள்ளடக்கியது கறிவேப்பிலை. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் என பலவிதமான நன்மைகள் இந்த கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது.
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் இந்த கறிவேப்பிலை அதிக நன்மைகள் தருவதால் இதன் மகத்துவம் உணர்ந்து பலரும் இதனை ஒதுக்காமல் உணவுப் பொருட்களில் சேர்க்க தொடங்கியுள்ளனர். இந்த கறிவேப்பிலையை வைத்து சுவையான மணம் நிறைந்த கறிவேப்பிலை சாதம் தயாரித்தால் உடலுக்கு நன்மை தரும் மேலும் குழந்தைகளும் தங்களின் மதிய உணவுக்கு விரும்பி உண்பர்.
250 கிராம் கறிவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து எண்ணெய் இல்லாமல் கடாயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் 50 கிராம் முழு மல்லி, 75 கிராம் கடலைப்பருப்பு, 50 கிராம் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின் எட்டு காய்ந்த மிளகாய்களை போட்டு லேசாக வறுக்கவும்.
இப்பொழுது ஏற்கனவே வறுத்து வைத்த கறிவேப்பிலையை இதனுடன் சேர்க்கவும். 50 கிராம் அளவு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்து இதனுடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து அனைத்தையும் மிதமாக வறுத்து பின்பு ஆற விடவும். ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து இவை இரண்டும் பொறிந்ததும் 5 பச்சை மிளகாய், 6 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும். ஏற்கனவே வேக வைத்த சாதத்தை இந்தத் தாளிப்புடன் சேர்த்து கிளற வேண்டும். இந்த சூட்டுடன் கறிவேப்பிலை பொடியை கொட்டி கிளறி விடவும். அடுப்பை அணைத்து நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து பரிமாறவும்.