தேவையானவை:
முருங்கை இலை – 1 கப்,
வெள்ளை எள்ளு, உளுத்தம் பருப்பு – தலா 1/4 கப்,
சிவப்பு மிளகாய் – 10,
பூண்டு – 5 பற்கள்,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முருங்கை இலையைச் சுத்தம்செய்து, கழுவி நிழலிலே வெள்ளைத் துணியில் போட்டு உலர்த்த வேண்டும். வெயிலில் காயவைத்தால், பச்சை நிறம் நீங்கிவிடும்.
முருங்கை இலை மொறுமொறுப்பான பதத்துக்குக் காய்ந்த பின்னர், தவாவில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வெள்ளை எள்ளு, பூண்டு, புளி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், காய்ந்த முருங்கை இலையுடன் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடியாக அரைத்தால், முருங்கை இலைப் பொடி தயார். இட்லி பொடிக்குப் பதிலாக இதைத் தொட்டுச் சாப்பிடலாம்.
பலன்கள்:
இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எல்லோருக்கும் ஏற்றது. சருமத்துக்கு நல்லது. ரத்தச்சோகையைத் தீர்க்கும். கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட இந்தப் பொடியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.