ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி கிச்சடி ரெசிபி
ஊட்டச்சத்து அதிகமுள்ள க்ளூட்டன் இல்லா உணவுகளின் பட்டியலில் குதிரைவாலி அரிசி முக்கிய இடம் வகிக்கின்றது.
இதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட குதிரைவாலி அரிசியை பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் குதிரைவாலி அரிசியில் செரிந்து காணப்படுகின்றது.
இவ்வளவு ஊட்டச்சத்துகளும் நிறைந்த குதிரைவாலி அரிசியை கொண்டு காலை உணவுக்கு ஆரோக்கியம் நிறைந்த கிச்சடியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி- 150 கிராம் அல்லது 1 கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1தே.கரண்டி
கடலைப் பருப்பு – 1 தே.கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
முந்திரி – 10
பச்சை மிளகாய் – 4 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி – 50 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3 1/2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்னர் 3 1/2 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள குதிரைவாலி அரிசியை வடிகட்டிவிட்டு அதனுடன் சேர்த்து கிளறி நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியான கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி கிச்சடி தயார்.
Posted in: லைஃப்ஸ்டைல்