ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்த குழந்தையாக இருந்தாலும் அவரவர்களின் வசதிக்கேற்ற படி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறு என்று குழந்தை பிறந்த சில நாட்களில் குழந்தையின் இடுப்பில் கட்டுவோம். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.
ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் வந்தது.
குழந்தை பிறந்து ஏழாம் நாளில் இந்தக் கயிற்றை அணிவிக்கிறார்கள். ஆண்கள் என்றால் அவர்களது இறப்பு வரை இந்த கயிற்றை அணியும் வழக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் பருவம் வரையிலும் தொடரும் இந்த வழக்கம், பிறகு அற்றுப்போய் விடுகிறது.
அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது. நம்மை விஷம் கொண்ட பூச்சிகள் மற்றும் பாம்பு போன்றவை தீண்டிவிட்டால் அந்த விஷம் நமது கடிவாய் மற்றும் இதயத்திற்கு செல்லாமல் தடுப்பதற்கு, அரைஞாண் கயிறு பயன்படுகிறது.
எப்படியெனில் நமது கையினால், அரைஞாண் கயிற்றை அறுத்தெடுத்து அவசர உதவியாக இறுக்கிக் கட்டும் ஒரு தற்பாதுகாப்புக்காக பயன்படுகிறது.
ஆண்கள் தான் பெண்களை விட இந்த அரைஞாண் கயிற்றை தங்களின் இடுப்பில் அதிகமாக கட்டுவார்கள். ஏனெனில் ஆண்களை பாதிக்கும் குடல் இறக்க நோய் வராமல் அந்த அரைஞாண் கயிறு தடுக்கிறது.
இதனால் தான் பெண்களை விட ஆண்கள் அதிகமாக அரைஞாண் கயிற்றை கட்டும் பழக்கம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே உள்ளது.
இப்போதெல்லாம் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குழந்தையின் எடை காட்டும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் பல மாடல்களில் நிறைய காணக் கிடைக்கிறது. முன்பெல்லாம் நமது தாத்தா, பாட்டி காலங்களில் இந்த எலக்ட்ரானிக் எடை காட்டும் கருவிகள் எல்லாம் கிடையாது. குழந்தை வளர வளர அதன் எடை கூடுகிறதா? குறைகிறதா? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பது போன்ற விபரங்களை எல்லாம் அவர்கள் இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்துத்தான் அளந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை.
இடுப்பின் நடுவில் கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக நாளாக இறுகி இறுக்கமாகிக்கொண்டே போனால், குழந்தை பெரியதாக வளர்கிறது என்றும், அதன் எடை அதிகரிக்கிறது என்றும், அரைஞாண் கயிறு லூசாகி இடுப்பிலிருந்து கழன்று கால் வழியாக கீழே விழும் நிலை வந்தால் குழந்தை மெலிந்து, எடை குறைந்து கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம்.
இன்றைக்கு, ஓல்டு பேஷன் என்று கருதி அதை பலர் கட்டுவது கூடக் குறைந்து விட்டது. அரைஞாண் கயிறு கட்டுவது, நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமென்றே கூறலாம். அதை மனதில் கொண்டு, இருக்கின்ற தலைமுறைக்கு அதன் பயனை எடுத்துரைப்போம்.