சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!

சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.

பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.

பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!