காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். காளான்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது. மேலும் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட காளானை வைத்து அசைவத்தையே மிஞ்சும் அளவுக்கு சுவையான காளான் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
மிளகு – 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
குழம்பிற்கு தேவையானவை
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 5
கல்பாசி – சிறிய துண்டு
அன்னாசிப்பூ – 1
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
காளான் – 200 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை நன்றாக வதக்கி எடுத்து ஆரவிட வேண்டும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் போடடு பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை கொதிக்க விட்டு பின்னர் ஆரவிட வேண்டும்.
பின்னர் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் காளான் குழம்பு தயார்.