சளி, இருமல் நீங்க இந்த நண்டு ரசத்தை ஒருமுறை குடித்து பாருங்கள்!
சளி, இருமல் போன்ற தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே சுவையாக நாம் செய்யக்கூடிய ஒரு அருமருந்து தான் நண்டு ரசம். நண்டு அனைவருக்கும் பிடித்த ஒரு கடல் உணவு. வயல் நண்டு, கடல் நண்டு என எந்த நண்டானாலும் அதன் சுவையில் குறைவிருக்காது. இந்த சுவையான நண்டை வைத்து சூடான சுவையான நண்டு ரசம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
நண்டு ரசம் வைப்பதற்கு நண்டுகளை எடுத்து அதனை கைகளால் உடைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றரை ஸ்பூன் சீரகம், 2 ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் வர மல்லி, சிறிதளவு கறிவேப்பிலை, மூன்று பச்சை மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு மண் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்து சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். 30 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து உரலில் தட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். எட்டுப்பல் பூண்டையும் இதே போல் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டும் நன்கு வதங்க வேண்டும். வதங்கிய பின் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து ஏற்கனவே தட்டி வைத்திருக்கும் நண்டை இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். நண்டு வெந்ததும். புளிக்கரைசல் சிறிதளவு ஊற்றி கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.
Posted in: லைஃப்ஸ்டைல்