வெஜிடபிள் போண்டா காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான சிற்றுண்டி வகையாகும். என்னதான் விதவிதமாய் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் சிற்றுண்டி வகைகளை, உணவு வகைகளை நாமே தயாரித்து சாப்பிடும் பொழுது ஏற்படும் சுவையும் திருப்தியும் அலாதியானது. அப்படி வீட்டிலேயே எளிதாக, அதே சமயம் அனைவருக்கும் பிடித்த மாதிரி ஒரு சிற்றுண்டி தயார் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால் இந்த வெஜிடபிள் போண்டாவை தாராளமாக முயற்சித்துப் பார்க்கலாம்.
இந்த வெஜிடபிள் போண்டா தயார் செய்ய கால் கிலோ அளவு உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலினை உரித்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு பெரிய வெங்காயம், 100 கிராம் அளவு கேரட் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் 100 கிராம் பீன்ஸை பொடியாக நறுக்கி வேகவைத்து கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியையும் அதேபோல் வேக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் மூன்று மேஜை கரண்டி எண்ணெயை காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பிரிஞ்சி இலை, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மிளகாய் தூள் அரைத்த இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை இதனை நன்கு வதக்கவும். பின் ஏற்கனவே வேக வைத்து தோல் உரித்து மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பீன்ஸ், கேரட், பட்டாணி எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சமாக தூவி கிளறி இதனை நன்கு ஆறவிட வேண்டும்.
காய்கறிகள் ஆறும் வரை இதற்கான வெளிமாவினை தயார் செய்யலாம். வெளி மாவு தயார் செய்ய ஒரு கப் கடலை மாவு, இரண்டு மேசை கரண்டி அரிசி மாவு, 2 மேஜை கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதிக தண்ணீராக இல்லாமல் ஓரளவு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். (கடலை மாவிற்கு பதில் மைதா மாவு மற்றும் கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து கொள்ளலாம்.) வெளி மாவு தயார் செய்த பின்பு ஆறிய காய்கறிகளை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கரைத்த மாவில் நனைத்து வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இந்த உருண்டைகளை போட்டு பொரிக்கவும். நன்றாக இருபுறமும் வேக வேண்டும். நன்கு சிவந்து வெந்ததும் இதனை எடுத்து தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்டினி உடன் பரிமாறலாம். அவ்வளவுதான் சூடான சுவையான வெஜிடபிள் போண்டா தயார்!